குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் தெரேசா மே அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடையத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பிரித்தானியாவின் பேச்வார்த்தைகள் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பில் ஐரோப்பிய ஓன்றியம் தன்னை அதற்காக தயார்படுத்த தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பில் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஓன்றிய நாடுகளின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேர்மனியின் அதிகாரிகள் இதனை உறுதிசெய்துள்ளனர். பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஓன்றியத்தின் சார்பில் கலந்துகொள்ளும் மைக்கல் பார்னியரும் இதனை தெரிவித்துள்ளார்
நாங்கள் அனைத்துவிதமான சூழ்நிலைகளிற்கும் தயாராகவுள்ளோம் எனவும் பிரித்தானியாவுடன் உடன்பாடு எதுவும் ஏற்பாடத சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐரோப்பிய ஓன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரும் பேச்சுவார்த்தைகள் முறிவடையலாம் அல்லது தோல்வியடையலாம் என்ற உணர்வு காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் உள்நாட்டு அரசியலே இதற்கு காரணமாகயிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.