குளோபல் தமிழ் செய்தியாளர்
இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஆலயத்தில் இன்று இடம் பெற்ற சுப்ரபாத பூசையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இலங்கையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று திருமலைக்கு சென்றிருந்த அவரை பத்மாவதி விருந்தினர் மாளிகை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, அதிகாரிகள் மற்றும் ஆந்திரக் காவல்துறையினர் வரவேற்றதுடன் ஆந்திரக் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அளித்தனர்.
மைத்திரிபால திருமலைக்கு சென்ற சில மணிநேரத்தில் அவர் தங்கியிருந்த பத்மாவதி விருந்தினர் மாளிகைக்கு 500 மீட்டர் தூரத்தில் ஆளில்லாத விமானம் ஒன்று பறந்து விழுந்தமை சிறியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமரா பொருத்தப்பட்ட ஆளில்லாத விமானம் பறந்து மரம் ஒன்றில் விழுந்தைக் கண்ட ஆந்திரக் காவல்துறையினர் குறித்த விமானத்தை மீட்டனர்.
இந்தநிலையில் திருமலையை அழகுபடுத்த, எந்தெந்த இடங்களில் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக, பெங்களூரில் இருந்து வந்த என்.டி.ஆர்.எஃப் நிபுணர்கள் குறித்த ஆளில்லா பறக்கும் விமானம் மூலம் ஒளிப்பதிவு செய்தமை தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது