இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் விக்டர் கெஸ்பர் தெரிவித்துள்ளார். இதேவேளை உலகில் பெருமளவான நாடுகளில் ஏற்றத் தாழ்வு குறைந்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் விக்டர் கெஸ்பர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணமாக உலகில் தனி நபர் வருமானம் அதிகரித்திருப்பதால் ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக இவ்வாறு நிலைமை காணப்பட்டாலும், சீனா, இந்தியா, அமெரிக்காவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுவதாக விக்டர் கெஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை குறைக்கவும், நிலையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியது அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
2017-18ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.4 வீதமாக காணப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தற்போது தெரிவித்துள்ளது. இது முன்னதாக கணிக்கப்பட்டதை விட 0.3 வீதம் குறைவானது என்றும் கூறப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தகதி அடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டும் இது தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.