நேற்றையதினம் பிரான்ஸின் கலே முகாமில் தங்கியிருந்த குடியேறிகளை காவல்துறையினர் அகற்ற முற்பட்ட வேளை காவல்துறையினருக்கும் குடியேறிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வடக்கு பிரான்ஸ் பகுதியில் காட்டுப்பகுதியில் உள்ள கலே துறைமுக நகரத்தில் குடியேறிகளுக்கான முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சுமார் 7 ஆயிரம் குடியேறிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் அந்த முகாமை அகற்ற முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் நேற்றைதினம் கலே முகாமில் இருந்து குடியேறிகளை பிரான்சிலுள்ள ஏனைய முகாம்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் இதற்காக அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் குடியேறிகளில் ஒரு பிரிவினர் கலே முகாமை விட்டு வெளியேற விரும்பவில்லை என்பதுடன் அவர்கள் பிரித்தானியா செல்லவே விரும்புவதாக அறிவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையை கட்டுப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 2500 குடியேறிகள் கலே முகாமில் இருந்து ஏனைய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் ஏனையோரும்; படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.