ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் டிசம்பர் 5ம் திகதிக்குள் நினைவு மண்டபம் கட்டி முடிக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5ம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது உடல், மெரினா கடற் கரையில் எம்ஜிஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அதற்காக 15 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற இது தொடர்பாக இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 5-ம் திகதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதனையொட்டி அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தி யுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில், ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் மாதிரி வரைபடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது