ஸ்பெயினில் இருந்து தனி நாடாக பிரிந்து விட்டதாக கட்டலோனிய பாராளுமன்றில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கட்டலோனியாவில் தனது நேரடி ஆட்சியை அமுல்படுத்த ஸ.பயின் பிரதமர் மரியானோ ரஜோய் தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கட்டலோனியா பாராளுமன்றல் இன்று தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பினை நடத்தியுள்ளது.
இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும்,எதிராக 10 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபர் 11ம் திகதியன்று ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கட்டலோனிய ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டிருந்தனர்.
எனினும், ஸ்பெயினுடன் பேசுவார்த்தை நடத்தும் பொருட்டு, அந்தப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிராந்திய அரசின் கீழும் உள்ளன.
இந்தநிலையில் கட்டலோனியா தனி நாடாகினால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஸ்பெயின் பாதிக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளின் தனி நாட்டுக் கோரிக்கைகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.