Home இலங்கை சிங்கள அரசியல், மத தலைவர்களுக்கு அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை – சி.வி.

சிங்கள அரசியல், மத தலைவர்களுக்கு அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை – சி.வி.

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிங்கள அரசியல், மதத் தலைவர்கள் என்ன தருவார்கள் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டுக் கேளுங்கள். ஒரே குரலில் கேளுங்கள். என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தாங்கள் சிங்கள அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைகளுடன் பலதையும் பேசி வருகின்றீர்கள். சில நேரங்களில் அவர்களைச் சினம் ஊட்டும் வண்ணமும் கருத்துக்ளை வெளியிட்டு வருகின்றீர்கள். இதனால் தர இருப்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் தராது விட்டு விடுவார்களோ என்ற ஒரு பயம் தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன? எனும் கேள்விக்கு பதிலளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
சிங்களத் தலைவர்கள் உங்களுக்குத் தர இருக்கின்றார்கள் என்று யார் உங்களுக்குச் சொன்னது? அத்துடன் எமக்கு சட்டப்படி தரவேண்டிய உரித்துக்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்து வைத்துக் கொண்டு “அதைத் தருவோம், இதைத் தருவோம்”, “இன்னொன்றைத் தரமாட்டோம்” என்று அவர்கள் பேரம் பேசுவதன் பின்னணி என்ன?
ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அதனை அண்மையில் இங்கு வந்த ஐ.நா அலுவலர் பப்லோ டி கிறீவ் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு எமது மக்கட் தலைவர்கள் அறிந்து வைக்க வில்லையே என்பது மனவருத்தத்தைத்  தருகின்றது.
அதாவது சிங்கள அரசியல், மத தலைவர்களுக்கு அதிகாரங்களைத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள எள்ளளவும் விருப்பமில்லை என்பதே அது. விரும்பம் இருந்திருந்தால் தாம் இதுவரை தருவதாக உலக அரங்கில் கூறியவற்றையேனும் தந்திருப்பார்கள். உதாரணத்திற்கு போர் முடிந்து எட்டு வருடமாகியும் பயங்கரவாதத் தடைச்சட்டம் கைவாங்கப்படவில்லை. இதையே செய்யாதவர்கள் எதைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? அவ்வாறு தருவதாக இருந்தாலும் அவற்றிலிருந்து சில காலத்தினுள் அவர்கள் கழன்று விடுவார்கள். பண்டா – செல்வா மற்றும் டட்லி செல்வா உடன்படிக்கைகளுக்கு நடந்ததே மீண்டும் நடைபெறும். 18 வருடங்களின் பின்னர் வட – கிழக்குப் பிணைப்புக்கு நடந்ததே காலந் தாழ்ந்தேனும் நடைபெறும்.
இவர்கள் தரமாட்டார்கள் என்று என்ன அடிப்படையில் கூறுகின்றீர்கள் என்று நீங்கள்  கேட்கலாம். அது தான் எம்முடைய இன முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணம். சிங்கள அரசியல் தலைவர்கள் ஏதோ விதத்தில் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தை எந்த விதத்திலுந் தாம்  விட்டுக்கொடுக்கக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருப்பது தான்
எமது இன முரண்பாட்டுக்குக் காரணம். பொய் பேசி, புருடா விட்டு, நைசாக ஐஸ் வைத்து பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டால் சிங்கள பௌத்த இனமே அழிந்து போய்விடும் என்ற ஒரு பிரமை சிங்கள அரசியல் தலைமைகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.
அதனால் அவர்கள் எப்படியும் முழு நாட்டினதும் அதிகாரத்தைத் தம் கைப்பிடிக்குள் வைத்திருக்கவே பார்ப்பார்கள். சட்டப்படி கூடி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இன, மத, மொழி அலகுந் தம்மைத் தாமே ஆள்வதே சிறந்தது. அவ்வாறு ஆண்டுகொண்டு, முழு நாட்டையும் ஒரே நாடாகக் கணித்துக் கொண்டு, அதற்குரிய ஆட்சியையும் நிலை நாட்டலாம். ஆனால் அதற்கு இடமளிக்க சிங்கள பௌத்தர்களுக்குப் பிரியமில்லை.
அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் இந்த நாடு மட்டுமே தமக்குண்டு என்றும், தமிழர்களுக்குத் தமிழ் நாடு உண்டு என்பதாகும். தமிழர்களுக்குத் தமிழ் நாடு உண்டு என்பதால் சிங்கள மொழி நடைமுறைக்கு வரமுதல் இங்கிருந்த திராவிடரின் வழித்தோன்றல்கள் தென்னிந்தியாவிற்குப் போய் விடவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா அல்லது இங்கு இருப்பதானால் தம்முடைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் தாம் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? ஆக மொத்தம் “தமிழர்களே வெளியேறுங்கள்! இல்லையேல் எமக்கு அடிமைகளாக வாழுங்கள்” என்பதே அவர்களின் அரசியல் சித்தாந்தமாகத் தோன்றுகின்றது.
ஆனால் அதனை வெளிவிடாமல் மிக நாகரீகமாக “அது தருவோம், இது தருவோம்” என்று எம்மை அலைக்கழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் அவர்கள் எதைத் தரப்போகின்றார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமது முழுக்கட்டுப்பாட்டை மீறிய, சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது சட்டத்தால் எதிர்பார்க்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம் எதனையும் அவர்கள் தரப்போவதில்லை. பின் எதற்காக அவர்களுக்கு “ஆமா” போட வேண்டும்? சரியோ பிழையோ தரக்கூடியதைத் தாருங்கள் என்று தானே எமது அரசியல் தலைமைகள் கேட்கின்றார்கள்.
தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கும் போது எமக்கு எது வேண்டும் என்று முற்றாக அறிந்து வைத்திருக்கும் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இன்னொருவரின் நல்லெண்ணத்தை நாடி நிற்கின்றோம். ஏதோ கிடைக்கும் என்ற நப்பாசை! அவை கிடையாதென்பதே எனது கருத்து. அதாவது நாம் எமக்கு எது வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கினோமோ அவை என்றும் கிடையாது என்பதே எனது வாதம்.
அதற்காக அவர்கள் சாப்பிடும் வாழையிலையில் இருந்து தவறி விழும் உணவுப் பருக்கைகளை பெற்றுக் கொண்டு அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்வோம் என்பது மடமை. காலக்கிரமத்தில் பருக்கைகள் கூட பாதியில் நிறுத்தப்பட்டு விடுவன.
ஆகவே நாம் எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும். “மயிலே தா” என்றால் மனமுவந்து மயிலானது இறகைத் தராது. உரிமைகளை நாம் பெற முயற்சிக்கும் போது சிங்களத் தலைவர்கள் என்ன நினைக்கின்றார்களோ என்று நாம் நினைத்துக் கவலைப்படுவது எமது கையாலாகாத தனத்தையே வெளிப்படுத்துகின்றது.
எவ்வாறு போராடப்போகின்றீர்கள் என்பதே உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும். முதலாவது தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். எவ்வாறு சுனாமியின் போது விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் ஒரு சில நாட்களுக்கு ஒன்று சேர்ந்து சேவை புரிந்தார்களோ, அதே போல், வட கிழக்கு மாகாணங்களில் எமது இனத்தின் தொடர்ந்த குடியிருப்பே சந்தேகத்திற்கு உட்படும் போது, நாம் விழித்துக் கொண்டு ஒன்று பட முன்வர வேண்டும்.
வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு, மற்றைய தெற்கத்தைய மாவட்டங்கள் போன்ற பலவற்றிலும் பரந்து வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்று சேர வேண்டும். அவர்களின் சிந்தனையில் ஒற்றுமை மலர வேண்டும். இது சிங்கள மக்களுக்கு எதிரான சிந்தனை அல்ல. தமிழ் மக்களுக்குச் சார்பான சிந்தனையே.
அடுத்து எமது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எம்முடன் கூட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக தென்னிந்திய தமிழ்ச் சகோதர சகோதரிகள் எம்முடன் உறவு வைத்திருக்க வேண்டும். எவ்வாறு பரந்து வாழும் யூதர்கள் ஒரு கொடிக் கீழ் கொண்டுவரப்பட்டார்களோ அதே போல் நாமும் ஒருங்கிணைய வேண்டும். ஒருங்கிணைந்தால் உலக அரங்கில் நாம் முன்வைக்கப்போகும் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டேயாக வேண்டும்.
அடுத்து இதுவரை காலமும் சரித்திரத்தை பிறழ்வாக மாற்றிக்கூறி வந்த சிங்கள பௌத்தர்களின் பொய்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
உண்மையை சிங்கள மக்கட் தலைவர்களுக்கு உணரவைக்க வேண்டும். உதாரணத்திற்கு சிங்கள மொழி நடைமுறைக்கு வரமுன் இங்கு திராவிடர்கள் வாழ்ந்து வந்ததையும் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த அப்போதைய பௌத்தர்கள் தமிழர்களே என்பதையும் இன்று வடக்கு கிழக்கில் இருக்கும் பௌத்த எச்சங்கள் தமிழ் பௌத்தர்களால் விடப்பட்டனவே யொழிய அங்கு சிங்களவர் பெருவாரியாக எந்தக் காலகட்டத்திலும் வாழவில்லை என்பதையும் எடுத்துக் கூற வேண்டும்.
சர்வதேச நெருக்குதல்கள் கூர்மையிடைய வேண்டும். சர்வதேச சட்டத்தின் கீழ் எமக்கிருக்கும் உரித்துக்களைப் பெற நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் எமக்குச் சார்பான சிங்கள சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து சிங்கள அரசியல் தலைவர்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வர நாம் முயற்சிக்க வேண்டும். எமக்கு சுயாட்சி வழங்குவதால் அவர்களுக்கு நன்மையேயன்றி தீமை எதுவும் நேராது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நாம் எமது அகந்தையையும் ஆணவத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு தமிழ் இனத்திற்காகக் கூட்டுச் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும். படிக்காத ஒரு சிங்களத் துப்பாக்கி வீரனுக்கு நாங்கள் மதிப்பும் மரியாதையும் பயபக்தியும் காட்டுகின்றோம். படித்த அன்புள்ள எமது சகோதரர்கள் என்று வந்தவுடன் நாம் அங்கு போட்டி, பொறாமை போன்றவற்றையே காட்டுகின்றோம். ஒருங்கிணைந்து வாழ்வது என்பது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
முக்கியமாக உயர் குலத்தவர்கள் என்று தம்மை வர்ணிப்பவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும். யாவரையுஞ் சகோதரர்களாக ஏற்கும் மனோபாவம் பிறக்க வேண்டும்.
தற்போது நாம் எமது மதிப்புள்ள மக்களை வெளிநாடுகளுக்குப் பறிகொடுத்து விட்டே தமிழர் உரிமைகளுக்காகப் போராடுகின்றோம். எமது கல்வி நிலை சரிந்து வருகின்றது.
தொழில்களில் பாண்டித்தியம் பெற்றோர் தொகை குறைந்து வருகின்றது. வெளியில் இருந்து வருவோரை இங்கு குடியமர்த்தி அரசாங்கம் அவர்களுக்கு எங்கள் காணிகளைப் பகிர்ந்தளித்து வருகின்றது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்? எமது தற்போதைய நிலை என்ன என்று நாங்கள் ஒருமித்துச் சிந்திக்கத் தொடங்கினால் ஒற்றுமையின் அவசியம் பற்றி ஓரளவு நாங்கள் புரிந்து கொள்வோம். முடியும் என்று நாம் நினைத்தால் முடியாதது ஒன்றில்லை.  ஒற்றுமைப்படுவது அவ்வளவு சிரமமல்ல. எமது அடிப்படைகளிலாவது நாம் ஒற்றுமைப்பட வேண்டும். ஆனவே எனது வேண்டுகோள் சிங்கள அரசியல், மதத் தலைவர்கள் என்ன தருவார்கள் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு வேண்டியதை ஒன்றுபட்டுக் கேளுங்கள். ஒரே குரலில் கேளுங்கள். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More