யாழ்.திருநெல்வேலி தனியார் வைத்திய சாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை செய்தது கொண்டவரில் ஒருவரின் கண் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் , ஒருவரின் கண் முற்றாக அகற்றப்பட்டு விட்டது.. சுன்னாகம் வங்கி வீதியை சேர்ந்த ஏரம்பமூர்த்தி பூவலிங்கம் (வயது 57) என்பவரின் கண்ணே முற்றாக அகற்றப்பட்டு உள்ளது.
இந்தத் வைத்திய சாலையில் கடந்த 21ஆம் திகதி கண்ணில் கற்ராக் சத்திர சிகிச்சை செய்து கொண்ட 09பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகினர். அவர்களின் நோய் தீவிர மடைந்த நிலையில் 09பேரும் கடந்த 23ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 5 பேருக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடந்த 25ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் கண்ணில் பக்றீரியா தொற்று அதிகமாக காணப்பட்டதனால் அவரது கண்ணை அகற்ற வேண்டும் எனவும், இல்லை எனில் மூளைக்கு செல்லும் நரம்பினை நோய் தாக்கும் என வைத்தியர்கள் கூறி தனது அப்பாவின் இடது கண்ணை நேற்று மதியம் வைத்தியர்கள் அகற்றியதாக பூவளிங்கத்தின் மகன் தெரிவித்தார்.
அதேவேளை ஏனைய நால்வரின் கண் பார்வை குணமடைவது 99 வீதம் சாத்தியமற்றது என கொழும்பு வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன. அதேவேளை குறித்த தனியார் வைத்திய சாலை சத்திர சிகிச்சை கூடம், வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. சத்திர சிகிச்சையால் கிருமி தொற்று பரவியமை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.