தமிழகத்தில் ஆரம்பித்துள்ள வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார். இதேவேளை சென்னையில் ஓட்டேரியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து சாக்கடை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் பெரும் அசெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆத்துடன் ஓட்டேரியில் ஏற்பட்ட கால்வாயில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீதியில் நடந்து சென்ற மூதாட்டி ஒருவர் தடுமாறி கீழே விழுந்து மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்தார்.
இதேவேளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம். தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.