இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உட்பட பல்வேறு சம்பவங்களின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இறப்புகளை பதிவு செய்து மரண சான்றிதழை பெறுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மேலும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு டிசம்பர் 9ம்திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான சட்டம் ஏற்கனவே இரு தடவைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது தடவையாகவும் தற்பொழுது நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புகளை பதிவு ( தற்காலிக ஏற்பாடுகள் ) சட்டத்தின் கீழ் காணாமல் போனதாக கூறப்படும் நபர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் மரணத்தை பதிவு செய்து உறவினர்கள் மரண சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையில் உள் நாட்டு யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டதாக தெரிவித்து அவர்களின்; உறவினர்களினாலும் மனித உரிமைகள் அமைப்புகளினாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் தொடர் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.