குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கைதிகளுக்கான போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற்றமடைய வேண்டும் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
அரசியல் கைதிகள் போராட்டம் குரல் கொடுத்து வருகின்றோம். போராட்டங்களையும் முன்னெடுத்தோம். அதன் ஒரு கட்டமாக வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தோம்.
அதனை தொடர்ந்து யாழ்.பல்கலை கழக நிர்வாகத்தை முடக்கியும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதனால் கலை , விஞ்ஞான மற்றும் வணிக – முகாமைத்தவ பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டு பல்கலை கழக வளாகத்தினுள் உள்நுழைய தடை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அந்நிலையில் தற்போது மாணவர்கள் நிர்வாக முடக்க போராட்டத்தினை கைவிட்ட பின்னர் மீண்டும் எதிர்வரும் திங்கள் மூன்று பீடங்களின் கற்கைகளும் மீள ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமான பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி அரசியல் கைதிகள் தொடர்பிலான போராட்டத்தினை அடுத்த கட்டம் எவ்வாறு முன்னெடுப்பது என தீர்மானிக்க உள்ளோம். எமது கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
தற்போது மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக மக்கள் மத்தியில் போராட்டத்தை கொண்டு செல்கின்றனர். ஊர்களில் உள்ள சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்களை , மாணவர்கள் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவைகளை எடுத்து கூறி வருகின்றார்கள்.
எமது இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் , உதவியவர்கள் என நூற்றுக்கணக்கனோர் இன்னமும் சிறைகளில் வாடும் போது நாம் மாத்திரம் வெளி உலகில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. அதனால் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.
யுத்தம் முடிவடைந்து எட்டாண்டு கடந்தும் நல்ல எண்ண அடிப்படையில் கூட நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்கலாம். ஆனால் அவர்களை விடுதலை செய்யவில்லை.
எனவே அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக போராட்டங்கள் மாற்றமடைய வேண்டும் அரசியல் கைதிகளுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். அரசியல் வாதிகளும் உங்கள் வேற்றுமையை களைந்து ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும்.என மேலும் தெரிவித்தார்.