இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு காரணமாக கடந்த ஐந்து நாட்களாக இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுடெல்லியில் காற்று மாசுவின் மத்தியில் வாழ்வது நரகமான நகரத்தில் வாழ்வது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
டெல்லி நகரின் வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி நகரம் மாத்திரமின்றி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் காற்றில் மாசு காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த மாதம் மாறிவிடும் என்று கூறுவதை சாடிய ஹர்பஜன் சிங், ஒவ்வொரு மூச்சுக்கும் சுடுகாட்டுக்கு அருகில் சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.
தனது ருவிட்டரில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாம் மரணத்தின் அருகில் இருக்கிறோம் எனவும் எச்சரிக்கை அறிகுறி என்றும் முடிவு நெருங்குகிறது என்றும் கூறியிருப்பதுடன் நிலமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவதாகவும் சுற்றுச்சூழலை நரகமாக்கி விட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது பற்றி அறியாமையில் இருப்பதே மிகப்பெரிய பிரச்சினை என்றும் கூறியுள்ளார். இதேவேளை மற்றுமொரு கிரிக்கெட் வீரரான சேவாக், காற்றில் மாசு, சூழல் நாசகேடு விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என முன்னர் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.