குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூன்று தசாப்தங்களாக நாட்டில் நீடித்து வந்த யுத்தம் காரணமாக 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாத காரணத்தினால் யுத்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் காரணமாக ஏற்பட்ட செலவுகள் நட்டங்கள் இதுவரையில் எந்தவொரு தரப்பினாலும் மதிப்பீடு செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் தகவல்களின் அடிப்படையில் தாம் யுத்தம் தொடர்பான செலவுகளை குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு 200 பில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான தொகை செலவு ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.