குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.சாவகச்சேரி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இராணுவ சுற்றி வளைப்பில் கைது செய்யபப்ட்ட 24 இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் சார்பில் கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் போது குறித்த 12 பேரின் மனுவில் உள்ள 09 பேரின் வழக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் அக்கால பகுதியில் பணித்திருந்தது.
அதன் பிரகாரம் அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் , இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மற்றும் இராணுவத்தினர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீண்டும் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
அந்நிலையில் யாழில்.வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பது எதிரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என வழக்கு 2003ஆம் ஆண்டு பகுதியில் அனுராதபுர நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் கடந்த 14 வருட காலமாக இந்த வழக்குக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தகவலும் தெரியாது.
அதனால் குறித்த வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ‘மேன்முறையீட்டு நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை சுட்டிக்காட்டி, வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது’ என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.
ஏனைய மூவரின் மனுக்கள் யாழ்.மேல் நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றைய தினம் புதன்கிழமைக்கு திகதியிடப்பட்டது. அதன் பிரகாரம் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனு தாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் கி.சுபாஜினி மற்றும் கு.குருபரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.
அதனை அடுத்து எதிர் மனுதாரர்களாக குறிக்கப்பட்டு உள்ள இராணுவ தளபதி , யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.