உலகம்

மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு – ஒரு சாட்சி வவுனியா வர சம்மதம் – இரு சாட்சி வெளிநாட்டில் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கின் சாட்சியத்தில் ஒருவர் வவுனியா மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக ரொலோ அமைப்பின் கொள்கைப்பரப்பு செயலாளரும் , சிவன் அறக்கட்டளை நிறுவனருமான கணேஷ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கு சாட்சியத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டு அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கினை மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் புதன் கிழமை மேன் முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.  அதன் போது சட்டமா அதிபர் சார்பில்  ‘ ஒரு சாட்சி வவுனியா வர சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், ஏனைய இரு சாட்சிகள் வெளிநாட்டில் வசிப்பதனால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை அதனால் கால அவகாசம் வேண்டும் என மன்றில் கோரிக்கை விடுத்தனர்.  அதனையடுத்து 29ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றில்  மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

29ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்று நிச்சயமாக முடிவெடுக்கும் என எமது சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எமக்கு வாக்குறுதி தந்துள்ளார். நீதித்துறையில் ஜனாதிபதி தலையிட முடியாது. அவரை தலையிட வேண்டும் என கோர முடியாது. நீதிமன்றத்தை நாடியே அதனை பெற வேண்டும்.

அதவேளை நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டும். என ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கோரியிருந்தேன் என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை அரசியல் கைதியான கணேசன் தர்சனின் தயாரான சித்திரா  தெரிவிக்கையில் , பெருங்குற்றம் செய்தவர்கள் வெளியில் இருக்கின்றார்கள். எனது பிள்ளைகள்  சிறு சிறு குற்றங்கள் புரிந்து இருக்கலாம் அவர்களை மன்னித்து விடுவிக்க வேண்டும். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மகனின் உடல் நிலை மோசமாகியுள்ளது. கடுமையான நோய்கள் தோன்றியுள்ளன.அதனால் மகன் சிறையில் பல இன்னல்களை அனுபவித்து வருகிறான் என தெரிவித்தார்.

அதேவேளை மற்றுமொரு அரசியல் கைதியான மதியழகன் சுலக்சனின் தாயார் புஸ்பமாலா தெரிவிக்கையில் ,  எனது கணவர் தான் சிறையில் இருக்கும் பிள்ளையை பார்த்து வந்தார். நான் நாலைந்து வருடமாக பார்க்கவில்லை. இப்ப தான் மகனை பார்த்தேன்.கணவன் தற்போது உயிருடன் இல்லை. ஆண் துணையின்றி எனது பெண் பிள்ளகைளை வளர்த்து வருகிறேன்.எனது மகனை விடுதலை செய்ய வேண்டும். என தெரிவித்தார்.

மற்றுமொரு அரசியல் கைதியான இராசதுரை திருவளின் மனைவியான சுபைதா தெரிவிக்கையில், கடவுளிடம் தான் மன்றாடி வருகின்றோம். வழக்கில் வென்று வவுனியாவுக்கு வழக்கு  மாற்றப்படும் என நம்புறோம். என தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி
கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நியாதிக்க எல்லையான புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்காடு பகுதிகளில் 18 கடற்படை சிப்பாய்களுக்கும், 8 இராணுவச் சிப்பாய்களுக்கும் உயிரிழப்பை விளைவித்தனர் என்று தெரிவித்து பயங்கரவாத தடைக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

அவா்களில் ம. சுலக்சன், க. தர்சன் ஆகிய இருவருக்கும் எதிராக 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பகிh்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

முதலாம் எதிரியான இராசதுரை திருவருள் என்பவரை இந்த வழக்கிலே சேர்த்து 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின்  சாட்சியங்கள் மூவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து கடந்த செப்ரெம்பர் மாதம் வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் மாற்றினர்.

மொழிப்பிரச்சினை மற்றும் தமது சார்பில் சட்டத்தரணிகளை நியமிப்பது உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி தமக்கு எதிரான வழக்கை வவுனியா மேல் நீதிமன்றில் நடத்துமாறு அரசியல் கைதிகள் மூவரும் கோரினர். அதற்காக அவர்கள் உணவு ஒறுப்பு போராட்டத்தை தொடர்சியாக முன்னெடுத்தனர். அவர்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply