குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:–
குறுக்கு விசாரணையின் போது, சாட்சியங்களை உரிய முறையில் வழங்காத பொலிஸ் அதிகாரியை எச்சரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சாட்சியத்தை இடைநிறுத்தி வழக்கினை ஒத்திவைத்தார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற வான் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் வான் சாரதிக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிசாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபப்ட்டது.
அதன் போது எதிரி மன்றில் முன்னிலையாகி இருந்தார். அதனை அடுத்து விபத்து நடைபெற்ற கால பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி சாட்சியம் அளித்தார்.
குறித்த சாட்சியம் பிரதான விசாரணையின் போது , யாழ்.பலாலி வீதியூடாக யாழில்.இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த வான் திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்படும் சந்தியில் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளை விபத்து ஏற்பட்டதாகவும்,
உடனடியாக விபத்துக்கு உள்ளன மோட்டார் சைக்கிள் ஓட்டியை வீதியால் சென்றவர்கள் வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் , தாம் நீண்ட நேரத்தின் பின்னரே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , அவதான குறிப்புக்களையும் , மாதிரி வரைபடத்தையும் கீறிக்கொண்டதுடன் சம்பவ இடத்தில் நின்ற கண்கண்ட சாட்சியங்களிடமும் சாட்சியங்களை பதிவு செய்ததாகவும் , அதனை தொடர்ந்து வைத்திய சாலைக்கு சென்ற போது விபத்துக்கு உள்ளானவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் , பின்னர் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் தெரிவித்து எதிரிக்கூண்டில் நின்ற எதிரியையும் அடையாளம் காட்டினார்.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். அதன் போது , குறித்த வழக்கில் விபத்துக்கு உள்ளன மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கம் ஏன் குறிப்பிடப்படவில்லை என கேட்டார். அதற்கு குறித்த மோட்டார் சைக்கிளுக்கு வாகன இலக்கம் இல்லாமையினால் மோட்டார் சைக்கிளின் வாகன அடிச்சட்ட இலக்கம் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
விபத்தின் பின்னர், மோட்டார் வாகன பரிசோதகர் மூலம் விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கப்பட்டு அது வீதியில் செலுத்துவதற்கு உகந்தது என சான்றிதழ் தரப்பட்டதா ? என எதிரி தரப்பு சட்டத்தரணி கேட்ட போது குறித்த சான்றிதழ் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருப்பதாக சாட்சி தெரிவித்தார்.
குறித்த மோட்டர் சைக்கிள் வீதியில் செலுத்துவதற்கு உகந்தது இல்லை என சான்றிதழில் உள்ளது என எதிரி தரப்பு சட்டத்தரணி கூறினார். அதற்கு அது தெரியாது என சாட்சி பதிலளித்தார். அதனை தொடர்ந்து விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் சாரதிக்கு சாரதி அனுமதி பத்திரம் உண்டா ? மோட்டார் சைக்கிளுக்கு காப்புறுதி , வரி பத்திரங்கள் உண்டா என பரிசோதித்தீர்களா என எதிரி தரப்பு சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சாட்சி அவற்றை மோட்டார் சைக்கிள் சாரதியின் மனைவியிடம் கேட்டேன். கொண்டு வந்து தருவதாக கூறினார். ஆனால் பின்னர் அவற்றை தரவில்லை. என பதிலளித்தார். அதனை அடுத்து சாட்சியம் ஆனா பொலிஸ் அதிகாரி உரிய முறையில் சாட்சியங்களை அளிக்க தவறி வருகின்றார் என சாட்சியை எச்சரித்த நீதிவான் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய தினம் குறுக்கு விசாரணை தொடரும் என நீதிவான் கட்டளையிட்டார்.