,
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், வாள் வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ரோந்து நடவடிக்கை தொடர்பாக பொது மக்கள்அச்சமடைய வேண்டாமென்றும் விசேட காவல்துறை அதிரடிப் படையின் உயர் அதிகாரி இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அவற்றினை க்கு கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
குறிப்பிட்ட சிலரே இவ்வாறான வாள் வெட்டுச் சம்பவங்களை செய்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசிமென்றும், தங்களின் பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தெரிந்தால், யாழ்.பண்ணையில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமிற்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, இவ்வாறான தகவல்களை அறிவிப்பதற்கு அவசர அழைப்பு இலக்கம் ஒன்றினை மிக விரைவில் அமைக்கவுள்ளதாகவும், அந்த இலக்கத்தின் மூலம் அறிவிக்க முடியுமென்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.