யாழில். ஹொரோயின் போதை பொருள் வியாபாரியை கைது செய்ய தவறிய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகருக்கு யாழ்.நீதிமன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்திருந்த போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஹொரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் இளைஞர்கள் இருவரை கைது செய்தனர்.
கைது செய்யபட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய வேளையில், சந்தேக நபர்களான இரு இளைஞர்களும் “எமக்கு போதை பொருள் பாவிக்கும் பழக்கம் உண்டு. நாம் வழமையாக அதனை போதை பொருள் வியாபாரியிடமே பெற்றுக்கொள்வோம். அன்றைய தினம் போதை பொருள் வாங்க வருமாறு எம்மை அந்த வியாபாரி தொலைபேசி ஊடாக அழைத்தார். நாம் அங்கு சென்று அதனை பெற்றுக்கொண்ட வேளை அருகில் இருந்த இவர்கள் எம்மை கைது செய்தனர். போதை பொருள் வியாபாரியை கைது செய்யாமல் விட்டு விட்டனர். ” என தமது சட்டத்தரணி ஊடாக மன்றில் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகரை மன்றுக்கு அழைத்த நீதிவான் கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக குறித்த போதை பொருள் வியாபாரியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் போதை போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யபட்ட இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அந்நிலையில் போதை பொருள் வியாபாரியை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவிட்டு பல வாரங்கள் ஆகியும் வியாபாரி கைது செய்யபட்டவில்லை.
அதனை அடுத்து கடந்த வாரம் எடுத்துக்கொள்ள குறித்த வழக்கு விசாரணையின் போது , போதை பொருள் வியாபாரியை ஒரு வார காலத்திற்குள் கைது செய்து மன்றில் முற்படுத்த வேண்டும் என நீதிவான் குறித்த உப பொலிஸ் பரிசோதகருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்ட போது , போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் கைதான இரு இளைஞர்களும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் மன்றில் முற்படுத்தப்ப்பட்டனர்.
இருந்த போதிலும் போதை பொருள் வியாபாரியை நேற்றைய தினமும் நீதிமன்றில் முற்படுத்த வில்லை. அதேவேளை போதை பொருள் வியாபாரி என சந்தேகிக்கபப்டும் யாழ்.சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் வசி எனும் நபர் நேற்றைய தினம் காலையில் நீதிமன்றுக்கு வந்திருந்தார் எனவும் , நீதிமன்றினுள் அமர்ந்திருந்து வழக்கு விசாரணைகளை பார்வையிட்டார் எனவும் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து போதை பொருள் தரப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது சட்டத்திற்கு முரணானது எனவும் , அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கும் , பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பணிப்புரை விடுத்தார்.
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் விளக்க மறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.