குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா வடக்கு பிரேதச செயலரால் இளைஞர்களின் முகநூல் பதிவு தொடர்பில் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பம் வாங்கி கொண்டதாக குறித்த இரு இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நின்ற பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் கீழ் உள்ள மதிலில் ‘ மர நடுகை மாதம் ‘ எனும் தொனிப்பொருளில் பதாகை ஒன்று கட்டப்பட்டு இருந்ததை படம் பிடித்து தமது முகநூலில் பதிவிட்டனர்.
அவ்வாறு படத்தினை முகநூலில் பகிர்ந்தமை பிரதேச செயலகத்தை அவமான படுத்தியதாக காவல் நிலையத்தில் இரு இளைஞர்களுக்கு எதிராக பிரதேச செயலரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை குறித்த இரு இளைஞர்களையும் , நெடுங்கேணி போலீசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.
அதன் பின்னர் இன்றைய தினமும் விசாரணைக்கு வருமாறு காவல்துறையினர் ; இரு இளைஞர்களையும் அழைத்து மிரட்டும் தொனியில் விசாரணைகளை மேற்கொண்டனர் என இரு இளைஞர்களும் தெரிவித்தனர்.
அத்துடன் விசாரணையின் முடிவில் தங்களை குற்றவாளிகள் என காவல்துறையினர் கூறினார்கள் எனவும் பின்னர் முகப் புத்தகத்தில் எந்த பதிவுகளையும் பதிவிடமுன் பலரின் ஆலோசனை பெற வேண்டும், அரச கட்டிடத்தை படம் எடுக்க முடியாது அப்பிடி எடுப்பது சட்ட விரோத குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூகத்தில் படித்த மனிதர்கள் இப்பிடியான வேலைகள் செய்ய மாட்டார்கள் எனவும் நீங்கள் தப்பு செய்து விட்டீர்கள் இந்த பிரச்சினை நீதிமன்றம் சென்றால் உங்களுக்கு அரசதொழில் இல்லாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மரம் வெட்டுவம் பிடுங்குவம் இதை கேட்க நீங்கள் யார் ? படித்த பெரிய மனிதர் பிரதேச செயலர் , அவர் காவல் நிலையம் வரமாட்டார் நாங்கள்தான் அங்கு போக வேண்டும் எனவும் காவல்துறையினர் கூறியதாகவும் குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக விசாரணை அறிக்கை சிங்களதத்தில் எழுதப்பட்டு அதில் தம்மை கையொப்பம் வைக்க கோரினார்கள் எனவும் அதற்கு நாம் மறுப்பு தெரிவித்த போது தம்மை மிரட்டி அதில் கையொப்பம் வைக்க பணித்தார்கள் எனவும் இரு இளைஞர்களும் தெரிவித்தனர்.
நாம் முகநூலில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து காதவல்துறையினர் தமக்குள்ள அதனை காட்டி தம்மையும் புகைப்படத்தையும் பார்த்து பார்த்து சிரித்தனர் எனவும் மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
இளைஞர்களின் முகநூல் பதிவுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலர் முறைப்பாடு
Nov 23, 2017 @ 15:43
நெடுங்கேணி பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரினால் நெடுங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டு உள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகம் முன்பாக நின்ற பழமையான மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் கீழ் உள்ள மதிலில் ‘ மர நடுகை மாதம் ‘ எனும் தொனிப்பொருளில் பதாகை ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
அதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம் பிடித்து தனது முகநூலில் பகிர்ந்து உள்ளார். குறித்த இளைஞன் பகிர்ந்த படத்தை மற்றுமொரு இளைஞன் தனது முகநூலில் பகிர்ந்து பகிர்ந்துள்ளார்.
அவ்வாறு படத்தினை முகநூலில் பகிர்ந்தமை பிரதேச செயலகத்தை அவமான படுத்தியதாக காவல் நிலையத்தில் இரு இளைஞர்களுக்கு எதிராகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை குறித்த இரு இளைஞர்களையும் , நெடுங்கேணி காவல்துறையினர் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் பின்னர் நாளை வெள்ளிக்கிழமை இளைஞர்களின் மடிக்கணணியை கொண்டு வரும் படி பணித்துள்ளனர்.