குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் ஆறு பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த கொழும்பு உயர் நீதிமன்றம் ஹிருனிகாவின் ஆதரவாளர்கள் ஆறு பேருக்கு இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து அதனை 12 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஒவ்வொரு சந்தேக நபருக்கும் 32000 அபராதமும், கடத்தப்பட்ட நபருக்கு அனைத்து சந்தேக நபர்களும் 285000 ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். கடத்தல் சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் காலங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.