குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும் என ஆளும் கட்சி தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இந்த பிரேணை பயனற்றது என கருத்து வெளியிட்ட நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்தப் பிரேரணை தோல்வியடையும் என தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, பலனற்ற ஒன்று என்று தாம் கருதுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியும் ஜே.வி.பியும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன் போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஒருசிலரால் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணைகள் குறித்து தம்மால் கருத்து தெரிவிக்க முடியாது எனவும், அது பலனற்ற விடயமாகவே தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளர்ர்.
இதேவேளை, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் வெற்றிபெறுவது உறுதி என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதிலும், அது தொடர்பான எல்லை மீள் நிர்ணயம் மற்றும் வர்த்தமானி வெளியீடு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அவர் மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டுள்ளார். இந்தநிலையில், அவருக்கு எதிராக எத்தகைய நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அவர் அதை வெற்றிகொள்வார் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.