குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒழுங்கமைத்தனர் என யாழ்ப்பாணம் காவல்நிலயத்தில் இன்று நண்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பொறுப்பாளர் எஸ்.கனகராஜா இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். ‘வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க சட்டத்துக்கு மாறாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதானால் பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர்கள் ஐந்து பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்கத்தின் தீர்மானத்துக்கு மாறாக பருத்தித்துறை சாலைப் பொறுப்பாளரின் பணிப்பில் அந்த சாலையின் பேருந்துகள் இன்று காலை சேவையில் ஈடுபட்டன. இதனால் தொழிற்சங்கத்தினருக்கும் பருத்தித்துறை சாலை பேருந்து சாரதி, நடத்துனருக்கும் இடையே இன்று காலை யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் முறுகள் நிலை ஏற்பட்டது. எனினும் காவல்துறையினர்; தலையிட்டு அதனை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பொறுப்பாளரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.