ஆசிய சுற்றுப்பயணத்தின் போது தான் தவிர்த்த ரோஹிங்கியா என்ற வார்த்தையை சொல்லி பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்துள்ளார்.
அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை அனைத்து மதத்தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாப்பாண்டவர் மியான்மர் பயணத்தின் போது சொல்ல மறுத்த ‘ரோஹிங்கியா’ என்ற சொல்லுடன் ரோஹிங்கியா இன மக்களை அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து பங்களாதேசில் தஞ்சமடைந்திருக்கும் 16 ரோஹிங்கியாக்கள் டாக்காவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அவர்களை வாழ்த்தி வரவேற்று கைகளைப் பற்றிய பாப்பாண்டவர் அவர்களது துயரக்கதைகளை கேட்டதுடன் உங்களை துன்பத்திற்கு உள்ளாக்குபவர்கள், உங்களை துன்புறுத்தியவர்கள், உங்களை காயப்படுத்தியவர்களின் பெயரால் நான் மன்னிப்புக் கேட்கிறேன். எல்லாவற்றிருக்கும் மேலாக ,வ்வுலகம் உங்கள் மீது காட்டுகின்ற அலட்சியத்திற்கும் மன்னிப்புக் கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.