குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
அண்மையில் சிங்கள நடிகை சுகினிதா வீரசிங்கவும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியும் இணைந்து புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிறந்த தின நிகழ்வை அனுஷ்டித்துள்ளனர். வித்தியா கல்வி கற்ற பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன. புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நடந்த சம்பவம் இனி ஒருபோதும் நடக்க கூடாது என்ற நோக்கின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் ஏற்பாடு செய்தவர்கள் கூறுகின்றனர்.
வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்முறை நிகழ்வுகள், இனி ஒரு போதும் நடைபெறக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தால் அது அர்த்தமுடையதாயிருக்கும். ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழ் இனப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொலைகள் பலவும் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தங்களின் போதெல்லாம் பாலியல் பலாத்காரம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையை வரலாறு முழுவதும் காணக்கூடியதாக இருக்கிறது.
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வன்புணர்வும் படுகொலையும் அல்லது இனக்கலப்பு திருணம் – இந்த இரண்டு நடவடிக்கைகளும் ஒரே நோக்கத்திற்காகவே மேற் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் வடக்கில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன் புணர்வுகளையும் துஷ் பிரயோகங்களையும் அணுக வேண்டும். வித்தியா படுகொலை இடம்பெற்ற புங்குடுதீவில்தான் சாரதாம்பாள் 1999ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதே புங்குடுதீவில்தான் 2005 ஆம் ஆண்டில் தர்சினி என்ற பெண், இலங்கை கடற்படையால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் சடலாக மீட்கப்பட்டார். மேற்குறித்த இரண்டு படுகொலைகளும் அரசியல் ரீதியாக பெரும் விளைவுகளை உருவாக்கிய படுகொலைகளாகும். வடக்கில் போரின் பின்னர் இராணுவத்தரப்பால் பாலியல் வன்புணர்வுகளும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பலவும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஊடகப் புலத்திற்கு வெளிவராத பல சம்வங்களும் நிகழ்ந்திருக்கின்றன.
2012ஆம் ஆண்டில் நெடுந்தீவில் சிறுமி ஒருத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அரசியல் ஆயுதக் குழு ஒன்றை சேர்ந்த நபர் இந்தக் கொலையில் தொடர்புட்டார். காரைநகரில் 11 வயதான பாடசாலைச் சிறுமி ஒருத்தி கடற்படைச் சிப்பாயால் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டிருந்தாள். அந்தச் சிறுமி தொடர்ச்சியாக 11 தினங்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாள். அத்துடன் அதே இடத்தில் 9 வயதுச் சிறுமி ஒருத்தியும் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாள். அங்கும் குற்றவாளி தண்டிக்கப்படாமல் நீதி மறுக்கப்பட்டது.
சிறுமிகள் தம்மை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களை அடையாள அணிவகுப்பில் இனம் காட்டும் ஒரு சூழல் நம்முடைய மண்ணில் ஏற்பட்டது எத்தகைய கொடுமை? வன்னியில் நெடுங்கேணி சேனைப்பிலவில் இராணுவ சிப்பாய் ஒருவர் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி பாழடைந்த கிணற்றுப் பற்றை ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார். அத்துடன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய இராணுவச் சிப்பாயை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டப்பட்டபோதும் நீதி கிடைக்கவில்லை. மாங்குளம் மன்னகுளத்தை சேர்ந்த சரண்யா என்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையால் சுகவீனமடைந்து சாவடைந்த சம்பவத்திலும் குற்றவாளியான இராணுவ சிப்பாய் தப்ப வைக்கப்பட்டார்.
போருக்குப் பிந்தைய வன்னியில் இவ்வாறு பல துஷ்பிரயோகங்களும் உண்மை மறைப்புக்களும் நடந்துள்ளன. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டபோது வித்தியாவின் குடும்பத்திற்கு நேரில் சென்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்திருந்தார். இந்தப் பயணம் ஒரு அரசியல் நோக்கிற்கானது என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. வித்தியாவுக்காக வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இசைப்பிரியாக்களுக்கு நீதியை வழங்குவரா? வித்தியாக்களும் இசைப்பிரியாக்களும் வேறு வேறு நோக்கங்களுக்காக சீரழிக்கப்பட்டு பலியிடப்பட்டிருந்தாலும் இவை எல்லாமே அநீதியின் பாற்பட்டதுதான்.
ஈழ இனப்படுகொலை யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான இசைப்பிரியாக்கள் இனவெறிப் பாலியல் வன்புணர்வாளர்களால் வேட்டையாடப்பட்டனர். சரணடைந்த பெண்போராளிகள், சரணடைந்த பொதுமகள்கள், சிறுமியர்கள் என குறிப்பிடப்படக்கூடிய சிலர் இனப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆண் போராளிகளும் பொதுமகன்களும்கூட நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இனவாத நோக்கில் பாலியல் பலாத்காரம் என்ற ஆயுதத்தின் மூலம் தமிழ் இனம், கூட்டு அவமானப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது.
பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்குப் பின்னால் இன வெறியர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்குப் பின்னால் தமது குற்றங்களை மறைக்கிறார்கள். இனவெறிப் பாலியல் வன்புணர்வாளர்கள் பாலியல் வன்புணர்வாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக மாறுகிறார்கள். இனவெறிப் பாலியல் வன்புணர்வாளர்களை பாதுகாத்துக்கொண்டு வித்தியாக்களை காப்பாற்ற முடியாது. இசைப்பிரியாக்களுக்கு நீதி வழங்குவதன் ஊடாக வித்தியாக்களையும் சரண்யாக்களையும் காப்பாற்ற முடியும். பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி என்பது ஒன்றே என்பதே யதார்த்தமாகும்.
புங்குடு தீவிலேயே தமிழ் இனத்தால் மறக்க முடியாத சாரதாம்பாள் படுகொலையும் தர்சினி படுகொலையும் நடந்திருக்கிறது. வித்தியா படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சாரதாம்பாள்களை, தர்சினிக்களை, இசைப்பிரியாக்களை பாலியல் வன்முறை புரிந்து மிக மோசமாக படுகொலை செய்த குற்றவாளிகள் இன்னமும் உலாவுகின்றனர். கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தப்படுகின்றனர். அந்த அநீதிகள் வீரமாக சித்திரிக்கப்படுகின்றன. இனவாத ரீதியாக நடைபெற்ற இசைப்பிரியா படுகொலைகளை மூடி மறைத்துக் கொண்டு அந்தக் குற்றவாளிகளை வீரர்களாக சித்திரித்து பாதுகாத்துக் கொண்டு, வித்தியாவுக்கு இரக்கப்படுவது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பானது.
இன்னொரு விடயத்தை தெளிவுபடக் கூறவேண்டியுள்ளது. வித்தியாவுக்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின் செயற்பாடும், வித்தியாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய இராணுவத்தினரது செயற்பாடும், தமிழ் மக்களின் மனங்களை வெல்லவும், இங்கு நடைபெற்ற இனப்பாலியல் வன்கொடுமைகளையும் இனப்பாலியல் படுகொலைகளையும் மறைப்பதற்கான நோக்கத்திற்காகவும் இடம்பெற்றவை என்றால், அது மிக மிக ஆபத்துக் கொண்ட, கொடுமையும் மனிதாபிமானமற்ற செயற்பாடும் ஆகும். உண்மையில் வித்தியாவை வைத்து இசைப்பிரியாக்களுக்கு நடந்ததை மறைப்பதைப்போல கொடுமை வேறொன்றுமில்லை.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்