பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு நளினியை பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என தெரிவித்திருந்தது.
இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நளினி தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டியுள்ள நளினி, 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்துள்ளதால், முன் கூட்டியே விடுதலை பெற தனக்கு தகுதி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதனால்தான் விடுதலை பெற முடியவில்லை எனவும், தன்னை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசு, தற்போது பரோல் வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச் சென்று விடுவேன் என தமிழக அரசு தெரிவித்துள்ளமையானது தவறு எனவும், இதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு 2 மாத பரோல் வழங்கியதைப் போல, மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாத பரோல் தனக்கு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
குறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.