ஒக்கி புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துக் கூறுவதாகவும், புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளை துரிதமாக செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை புகையிரத நிலையத்தில் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள், ஆண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பகலில் நடந்த போராட்டம் இரவிலும் நீடிக்கிறது. முதலமைச்சர் போராட்ட இடத்துக்கு வந்து மீனவர்களிடம் பேசும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
போர்க் கால அடிப்படையில் மீனவர்களை மீட்கும் பணி நடத்தப்படும் என்று முதலமைச்சர் கூறியபோதும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான மீனவப் பெண்கள், இளைஞர்கள் என பலரும் கலைந்து செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததுள்ளது.
கடந்த வாரம் ஒக்கி புயல் தாக்கியதில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பலரும் புயலில் சிக்கியதாகவும், சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழகம் தொடங்கி குஜராத் வரை பல்வேறு கடற்கரைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் எட்டு மீனவர்கள் மட்டுமே இதுவரை ஒக்கி புயலில் சிக்கி இறந்தவர்கள் என தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குழுப்பம் உள்ளது என மீனவ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.