இந்திய வீராங்கனை காஞ்சனாமாலா பாண்டே, உலக பாரா நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. இதில் 200 மீட்டர் மெட்லெ நீச்சலில் எஸ் 11 பிரிவில் கலந்து கொண்ட கண்பார்வையற்ற இந்திய வீராங்கனையான காஞ்சனமாலா பாண்டே தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக பாரா நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து காஞ்சனாமாலா கூறும்போது, “உலக சாம்பியன்ஷிப் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகி இருந்தேன். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் முதலிடத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றது ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அதை எப்படி வார்த்தைகளால் விவரிப்பது என்பது தெரியவில்லை” எனக் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் காஞ்சனாமாலா ஜேர்மனியில் நடைபெற்ற பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு காஞ்சனாமாலாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது சரியான நேரத்தில் காஞ்சனாமாலாவுக்கு கிடைக்கவில்லை. எனினும் தனது முயற்சியால் ஜெர்மனி சென்று போட்டியில் கலந்து கொண்ட நிலையில் பெர்லின் நகரில் யாசகம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இது தொடர்பாக பிரித்தானிய நாளிதழ் ஒன்றில் செய்தியும் வெளியாகியிருந்தது. இத்தைகைய கடினமான அனுபவங்களை கடந்து, மனம் தளராது, ஜேர்மனி போட்டியில் பங்கேற்ற காஞ்சானாமாலா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.