யாழ்.கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரின் பேருந்துக்களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள் மீது கடந்த இரு வாரங்களாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கையால் பயணிகள் பலத்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்று, ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலை காரணம் காட்டியே இச் சோதனைநடவடிக்கைகள் பல இடங்களில் நடத்தப்படுகின்றது.
வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்களை கடத்திச் செல்லும் பேருந்துக்கள் தொடர்பில் சட்ட ஒழுங்கு அமைச்சர், காவல்துறைமா அதிகருக்கு நேரடியாகவும், எழுத்து மூலம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ள போதும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க மறுக்கும் பொலிஸார் வேண்டுமென்ற சர்வாதிகரமாக மக்களுக்கு சௌகரியங்களை கொடுக்கும் சோதணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுத்தம் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையான சேவையில் குறிப்பாக 465 கிலோ மீற்றர் பயணத்திற்கான வழித்தட அனுமதிப் பத்திரத்திரம் பெற்றுக் கொள்வதற்கு 11 இலட்சம் ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும் வவுனியா கொழும்பு பேருந்து சேவைக்கு வெறுமனே 3 ஆயிரம் ரூபா மட்டுமே அறவிடப்படுகின்றது. யாழ்பாணத்தில் இருந்து செல்லும் பேருந்துக்களுக்கு முட்டுமே இவ்வாறு அதிகரித்த தொகை அறவிடப்படுகின்றது. குறிப்பாக 115 கிலோ மீற்றர் தூரத்திற்கே இத் தொகை அதிகரிப்பு காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தொடர்ந்து பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போது, கடந்த இரு வாரங்களாக போதைப் பொருள் கடத்தல் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பயணிகள் பேருந்துக்கள் வீதி வீதியாக மறிக்கப்பட்டு சோதணைக்கு உட்படுத்தப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு நாளில் மட்டும் ஆயிரம் பயணிகள் பேருந்தின் ஊடாக கொழும்பிற்குச் செல்லுகின்றனர். காவல்துறையினருடைய இவ் அதிகரித்த சோதணைகளால் அப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள் மூலமே இக் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அவ்வாறு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பேருந்துக்கள் தொடர்பில் காவல்துறையினருக்கு நாம் தகவல்களை வழங்கியிருந்தோம்.
இதுமட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க, காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கும் இது தொடர்பாக முறைப்பாடுகளை எழுத்து மூலமும், நேரடியாகவும் செய்துள்ளோம்.
அந்த முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அனுமதிபத்திரம் பெற்று சட்டவிதிமுறைகளுக்கு ஏற்ப பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள் மீதே போக்குவரத்து காவல்துறையினர் வேண்டுமென்றே தமது சர்வாதிகாரப் போக்கினை காட்டுகின்றார்கள்.
இது தவிர இராணுவத்தினரும் பேருந்து சேவைகளில் ஈடுபடுகின்றார்கள். இராணுவத்தினருடைய பேருந்துகளில்தான் அதிகளவிலான போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அது காவல்துறையினருக்கும் தெரியும். ஆனால் இராணுவத்தினருடைய பேருந்தை காவல்துறையினர் மறிப்பதும் இல்லை, சோதனை செய்வதும் இல்லை.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு கொண்ட பின்னரும், அவர்களை கைது செய்யாமல் அப்பாவி பயணிகளை வேண்டுமென்றே அசௌகரியப் படுத்தும் செயற்பாடுகளை காவல்துறையினர் நிறுத்த வேண்டும்.
இவ்விடயங்களில் உடனடியாக சட்ட ஒழுங்கு அமைச்சர், காவல்துறைமாஅதிபர் அதிபர் தலையிட்டு பாதுகாப்பான பயணிகள் சேவையினை நடத்த உதவ வேண்டும் மேலும் தெரிவித்தார்.