148
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு செய்த ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தண்டனை இடமாற்றத்தை நிறுத்தி மேல் நீதிமன்று இடைக் காலக் கட்டளை பிறப்பித்தது.
சென்ற வருடம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் நடந்ததாக சொல்லப்படும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த ஆசிரியருக்கு தண்டனை இடமாற்றம் வழங்கிய வட மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கையை இடைநிறுத்தி யாழ் மேல் நீதிமன்றம் நேற்று (13.12.2017) இடைக் காலக் கட்டளை பிறப்பித்தது.
சம்பவத்தை வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை ஏதாச்சதிகாரமானதென்றும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்படுவதை எதிர்காலத்தில் தடுத்து நிறுத்தக் கூடியதும் என ஆசிரியர் சார்பில் தோன்றிய சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வாதிட்டார்.
குறிப்பாக குற்றச்சாட்டுப் பத்திரம் எதுவும் சேவிக்கப்படாமல், விசாரணை நடத்தப்படாமல் தான்தோன்றித்தனமாக இவ் இடமாற்றம் வழங்கப்பட்டமை பாரதூரமானது என சட்டத்தரணி குருபரன் வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட ஆசிரியர் மீள யாழ்ப்பாணத்திற்கு சேவைக்காலத்தில் இடமாற்றம் பெற்று வர முடியாது என்ற நிபந்தனையுடன் இடமாற்றம் வழங்கப்பட்டமை எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் வாதிடப்பட்டது.
சமர்ப்பணங்களை ஏற்ற யாழ் மேல் நீதமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் சனவரி 10, 2018 வரை இடமாற்றத்தை இடை நிறுத்தி வைத்தார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்குமாறும் மன்று கட்டளை பிறப்பித்து.
Spread the love