கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தினேஷ் சவுத்ரி என்பவர் ராஜஸ்தானில் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூரை சேர்ந்த முகேஷ்குமார் என்பவர் கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 16-ம் திகதி மதியம் அவரது கடையின் விட்டத்தில் துளையிட்டு அதன் வழியாக உள்ளே இறங்கிய நபர்கள், நகைக்கடையில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். விசாரணையில், அந்த கடையை சமீபத்தில் ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.
அவரையும் அவரது நண்பரையும் காவற்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும், சிலர் ராஜஸ்தானுக்கு தப்பியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று காலை கொள்ளையர்களை சுற்றி வளைத்த தனிப்படையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் காவற்துறையினரை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்குக்கான பொறுப்பதிகாரி பெரிய பாண்டி உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.
இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் காவற்துறையினர் தீவிரமாக இறங்கினர். அவர்கள் நடத்திய விசாரணையில், ஏற்கனவே ராஜஸ்தானில் கொள்ளை வழக்கு ஒன்றில் கைதான தினேசு சவுத்ரிக்கு கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதை காவற்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து தினேஷ் சவுத்ரியை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை தப்பியோடியவர்களை பிடிக்கும் முயற்சியில் காவற்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.