நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிச் நகரில் சில நிமிட இடைவேளையில் நடந்த இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலா? என காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தெற்கு பகுதியில் இருக்கும் மாஸ்ட்ரிச் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஜேர்மன் மற்றும் பெல்ஜியம் எல்லைகளை அண்மித்த பிரதேசத்தில் நடந்த இரண்டு தாக்குதல்களுமே சில நிமிட இடைவேளையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படுவதற்கு உடனடி ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற தனி நபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவதால், இது தீவிரவாத செயலா? என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.