பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தோல்வியடைந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எதிர்வரும் 2019 மார்ச் 29-ம் திகதி வெளியேற உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் 18 மாத இழுபறிக்குப் பிறகு அண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் பிரித்தானிய ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவரான டொம்னிக் கிரீவ் நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்த ஒரு தீர்மானத்தில், பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது என கோரப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் மீது நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இதற்கு ஆதரவாக 309 பேரும், எதிராக 304 பேரும் வாக்களித்தனர். இதன்காரணமாக 5 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் தெரசா மே தோல்வி யடைந்தார்.
இதுகுறித்து தெரசா மே கூறியபோது, பிரெக்ஸிட் விவகாரத்தில் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து முன்னேறி செல்லும் என தெரிவித்தார்.