முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை நிறுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று வெளியிட்டிருந்தார். இதுபோன்று பல்வேறு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஜெயலலிதா மறைந்து இவ்வளவு நாட்கள் கழித்து, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக வீடியோ வெளியிட்டிருப்பதால், இது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் உத்தியோகத்தர் பிரவீன் நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகையதொரு சூழ்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிப்பரப்புவதை நிறுத்த வேண்டும் என ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு தேர்தல் ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.