206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தாயகத்தில் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு கூட்டமைப்பை பலப்படுத்தும் நோக்குடன் கூட்டமைப்புடன் இணைந்து தாம் போட்டியிட உள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அக்கட்சியின் சார்பில் வேந்தன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள தேர்தல் தேசியத்தை பெறுவதற்கான தேர்தல் அல்ல. இது அபிவிருத்தியை இலக்காக கொண்ட தேர்தல். இந்த தேர்தலில் பல குழுக்களாக பிரிந்து நின்று போட்டியிட்டு தாயகத்தை பிளக்காமல் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும்.
அதற்காவே நாம் தமிழ் மக்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுகின்றோம். ஆயுத போராட்டத்தின் போது தமிழ் மக்கள் பலம் பொருத்தி இருந்தோம். இன்று அவ்வாறான நிலைமை இல்லை எம்மிடம் அரசியல் பலம் மாத்திரமே உள்ளது. எனவே நாம் அரசியலில் பிரிந்து நிற்காமல் ஒற்றுமையாக நின்று எமது தேசிய பலத்தினை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் காட்ட வேண்டும். அதன் ஊடாகவே நாம் பேரம் பேசும் சக்தியாக உருவாக முடியும்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து உள்ளோம். கூட்டமைப்பில் எவர் பிழை செய்தாலும் அதனை நாம் தட்டிக்கேட்போம். தற்போதுள்ள அரசியல் களத்தை கருத்தில் கொண்டே நாம் கூட்டமைப்புடன் இனைந்து உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
Spread the love