அரசியலுக்கு வருவது உறுதி எனவும், தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகின்ற நடிகர் ரஜினிகாந்த் 6-வது நாளான இன்று தென்சென்னை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று காலை ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் மத்தியில் உரையாற்றுகையில் ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் அரசியலுக்கு வருவதைப் பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்து தான் பயம். நான் எதையாவது சொல்ல அது விவாதமாகிவிடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்த அவர் வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை எனவும் நான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை எனவும் இப்போது அரசியல் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் சீட்கெட்டுப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 31-ஆம் திகதி அறிவிப்பேன் – ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த்
Dec 26, 2017 @ 07:19
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று முதல் ரசிகர்களை சந்திக்கும் நடிகர் , ரசிகர்கள் முன்னிலையில் எதிர்வரும் 31-ஆம் திகதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகின்ற நிலையில் இவர் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று டிசம்பர் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்கின்ற நிலையில முதல் நாளான இன்று ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் திகதி அறிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனவும் ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் கதாநாயகன் ஆசையில் தான் சினிமாவுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ரஜினி ஸ்டைல் என முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் தான் எனத் தெரிவித்த அவர் தனது பிறந்த நாளின்போது தனியாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த முறை தன்னை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் வந்திருக்கின்றனர் எனத் தெரிவித்த ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததற்காக வருந்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் தான் அதிக ஆர்வத்தில் இருக்கின்றன எனத் தெரிவித்த அவர் அரசியல் பற்றி தெரிந்ததால் தான் வர தயங்கிறேன் எனவும் போரில் ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும். கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக அவசியம். எனவே தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் திகதி அறிவிப்பேன் எனத் தெரிவித்தார்.