ஓசூர் அருகே பைரமங்கலம் மொட்டைப் பாறையில் 14-ம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகி மாவட்டம் ஓசூர் வட்டம் பைரமங்கலத்தில் இருக்கும் மொட்டைப் பாறையில் மாவட்ட வரலாற்றுத் தேடல் குழுவின் தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையில் வரலாற்று ஆய்வாளர் வீரராகவன், பிரியன், மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக அக்குழுவின் தலைவர் அறம் கிருஷ்ணன் கூறியதாவது:
இக் கல்வெட்டு செதுக்கப்பட்ட ஆண்டும் தற்போது நமது தமிழ் ஆண்டும் துர்முகி வருடமாக இருப்பது பெரிய ஒற்றுமை. கி.பி.1408-ம் வருடம் வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஹரிராய விளபாடன் காலத்தில் தஷமி மண்டலேஸ்வரனாக இருந்த ஸ்ரீ வீரஅரியப்ப உடையார் என்ற ராஜ்ஜிய மண்டல தளபதியின் கீழ் உள்ள இந்த ஊரில் வசிக்கும் செட்டி வாமனா தேவரான சொகுடையப்பனுடைய மகன் முதலி செட்டி என்பவர் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள கழனியை தானமாகக் கொடுத்துள்ளார்.
மற்றொரு தானமும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ராஜேந்திர சோழ நாடு என குறிப்பிடப்படும் வரிக்கு அடுத்து நாயனார் என்ற வார்த்தையும் வருவதால் அருகில் ஏதாவது கோயில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதப்பணமானமூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள ஏரியில் ஐந்நூறு குழிகள் அளவு நிலம் தானமாக கொடுக்கப்பட்டதற்கான தகவலும் பதியப்பட்டுள்ளது. இதற்கு யாராவது குந்தகம் விளைவித்தால் அவர் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்திற்கு சமமாகும் என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் 11 வரிகள் மட்டுமே படிக்க முடிந்துள்ளது. இக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள காலம் விஜயநகர பேரரசின் முதலாம் தேவராயன் (கி.பி.1405-1432) ஆட்சி காலமாகும். இன்னும் சில வரிகள் பாறையின் அடியில் மண்ணில் மூடப்பட்டுள்ளதால் ஆய்வு தொடர்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
the hindu