இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு, வருகிற புத்தாண்டு திரைப்பட இசைத்துறையில் காலூன்றிய 25-வது ஆண்டு. திரைப்பட வேலைகளுக்கு இடையே திருக்குறளுக்கு இசையமைப்பு, ‘ஞாபகம் வருதே – பரத்வாஜ் 25’ சர்வதேச இசை நிகழ்ச்சிக்குத் தயாராவது என்று புத்தாண்டை புத்துணர்வான ஆண்டாக திட்டமிட்டு வைத்திருக்கும் நிலையில், அவரது இசையமைப்பில் உருவான ‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படமும் வெளியாவதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்..
‘அரண்மனை’க்குப் பிறகு, ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்கு இசையமைத்த அனுபவம் பற்றி..?
‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் தங்கர் பச்சானுடன் சேர்ந்து வேலை பார்க்கும் 3-வது படம் இது. எப்போதும் எதார்த்தத்தை மையமாக வைத்து படம் கொடுக்கும் இயக்குநர் அவர். ஒவ்வொரு படங்களில் வேலை பார்க்கும்போதும் பொழுதுபோக்கு அம்சம் என்பதைக் கடந்து பாடல்களில் ஏதாவது ஒரு புதுமையான உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தில் பணியாற்றியது வித்தியாசமான உணர்வு. இந்தப் படத்தின் கதையும், களமும் அதற்கு முக்கிய காரணம்!
எடுத்து சில ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு அந்தப் படம் வெளியாகிறதே..
காதலையும், அதன் பின்னணியையும் மையமாக வைத்து உருவாகியிருப்பதால் இது எல்லாவிதமான காலகட்டத்துக்கும் பொருந்தும். இப்போதும் புதுமையாக இருக்கும். குறிப்பாக கல்லூரிப் பருவம், அதற்கு அடுத்த காலநிலைகள் என்று இரு காலகட்ட பின்னணியில் படம் இருக்கும். பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் தோற்றத்தில் சற்று வித்தியாசம் தெரியலாம். மற்றபடி, இதில் பழமை, புதுமை என்று ஒன்றும் இல்லை. 5 பாடல்கள். அவை அனைத்தும் சிறப்பாக அமைய, கவிஞர் வைரமுத்து வின் வரிகளும் ஒரு பலம். ஒரு படத்தின் நல்ல காட்சிகள்தான் பின்னணி இசையைத் தேடிக்கொள்கின்றன என்பது என் நம்பிக்கை.
‘காதல் மன்னன்’ படத்தில் தொடங்கி இப்போது வரை உங்களுக்கும் இயக்குநர் சரணுக்குமான நட்பு தொடர்வது பற்றி..?
‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அசல்’ என்று நானும் இயக்குநர் சரணும் இணைந்து 12 படங்களுக்கு பணியாற்றியுள்ளோம். நல்ல நட்பும், நம்பிக்கையும் இருப்பதால்தான் இது சாத்தியம். ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமை யான ஒரு விஷயத்தை கையாண்டதாலேயே ஆரோக்கியமாக வேலை பார்த்தோம். காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி இசையிலும் தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டும் என்று சரண் விரும்புவார். நான் நல்ல நண்பனாக இருந்து அதை அவருக்குக் கொடுத்ததாகவே நினைக்கிறேன்.
வருகிற புத்தாண்டு, நீங்கள் இசைத் துறையில் காலூன்றிய 25-வது ஆண்டாச்சே?
1998-ல் வெளியான ‘காதல் மன்னன்’ தமிழில் எனக்கு முதல் படமாக இருந்தாலும், அதற்கு முன்பே 1995-ல் ‘மைக்கேல் தம்பா’ என்ற படம் முதலில் நான் இசையமைக்கத் தொடங்கிய படம். சில பாடல்கள் அமைத்ததோடு, தொடர்ச்சியாக பட வேலைகள் நடக்காமல் நின்றுவிட்டது. அந்த அடிப்படையில் என் திரை உலகப் பயணம் தொடங்கிய 25-வது ஆண்டு இது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக பயணிப்பதை ‘மாஸ்’ மகிழ்ச்சியாகவே நினைக்கிறேன்.
தற்போதைய திரை இசைச் சூழலில் ஏதேனும் வருத்தமாக உணர்கிறீர்களா?
பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பாடல் உருவாவது மிகப் பெரிய வருத்தத்தை அளிக்கிறது. 50-100 பேர் உட்கார்ந்து உருவாக்கப்பட்ட ஒரு பாடல் இப்போது ஒருவர் மட்டுமே கணினி முன்பு அமர்ந்து உருவாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இது மிகப் பெரிய மாற்றம். ஆனால் அதனூடே பாடல் வரிகளை ரசிக்கும் விதமாக, தெளிவாக உணரும் விதமாக உருவாக்குவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை, பாடல்களில் எப்போதுமே வரிகள்தான் முக்கியம். வரிகளுக்காகத்தான் பாடல் என்பது என் கான்சப்ட். இது குறைந்து வருவது வருத்தமே.
மற்ற இசையமைப்பாளர்கள்போல, மேடை நிகழ்ச்சிகளில் நீங்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை?
என் இசைப் பயணத்தின் 25-வது ஆண்டையொட்டி, ‘ஞாபகம் வருதே – பரத்வாஜ் 25’ என்ற பெயரில் உலகம் முழுக்க இசைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஒரு அறையில் உருவாகும் இசை, மக்களை எந்த அளவுக்கு போய் சேர்ந்திருக்கிறது என்பதை மேடை நிகழ்ச்சிகளில்தான் உணர முடியும். அந்தத் தேடலுக்கான பயணம்தான் இது. அதோடு, 1330 திருக்குறளுக்கும் இசையமைக்கும் வேலையை சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தேன். இதை 1000-க்கும் மேற்பட்டவர்களது குரலில் உருவாக்கியுள்ளோம். தமிழில் திருக்குறள், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 5 மொழிகளில் அதன் பொருள் என்று தயாராகிவருகிறது. இதை வருகிற ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது நடந்து வரு கின்றன.
நன்றி – த இந்து