மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் உள்ள, சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான காணி, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1990 முதல் படையினரின் முகாமாக விளங்கிவந்த இந்தக் காணி இன்று விடுவிக்கப்பட்டது.
இந்தத் தனியார் காணியை, சுவாமி ராம்தாஸ் நிறுவனம் 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்தது. அந்தக் காலப்பகுதியில், இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. பின்னர் 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், காவற்துறைத் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்திருந்தது.
காணியை விடுவிக்குமாறு பலமுறை பாதுகாப்பு தரப்பிடம் கோரப்பட்டதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைமைகளின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது. காணி விடுவிப்பை வலியுறுத்தி பலமுறை கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், ஜனாதிபதியிடம் மனுக்களும் கையளிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் காவற்துறைத் திணைக்களம், சுவாமி ராம்தாஸ் நிறுவன முகாமையாளர் இரா.முருகதாஸிடம் காணியை உத்தியோகபூர்வமாக கையளித்தது.