திருப்பதி தேவஸ்தானத்தில் விதியை மீறி பணியாற்றும் வேற்று மதத்தினர் 44 பேருக்கு தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருப்பதி கோவிலுக்கு தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்ற நிலையில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சம் வரை அதிகரிக்கின்ற நிலை காணப்படுகின்றது. அங்கு லட்டு தயாரிப்பு, பராமரிப்பு, வரவு-செலவு கணக்கு உள்பட அனைத்தும் தனித்தனி துறைகளாக பிரிக்கப்பட்டு வெளிப்படையாகவே இடம்பெற்று வருகின்றன.
மேலும் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் 15 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் பூவாரி தொண்டு செய்யும் சேவகர்கள் மூலம் நடைபெறும் அதேவேளை திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தினர் பணியில் அமர்த்த கூடாது என்ற விதி உள்ளது.
தேவஸ்தானத்தில் வேலைக்கு சேருபவர்கள், இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை 1989-ம் ஆண்டு முதல்தான் நடைமுறையில் உள்ளது. தற்போது திருப்பதி கோவில் தேவஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்த பின் மதம் மாறிய பலரும் அங்கு பணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தேவஸ்தான ஊழியர் நலப் பிரிவில் துணை நிர்வாக அதிகாரியாக பணியாற்ற வரும் பெண் ஒருவர் தேவஸ்தானம் வழங்கிய வாகனத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்ததுடன் அது தொடர்பான படம் மற்றும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
குறித்த பெண் அதிகாரி அலுவலக வளாகத்தில் ஏழுமலையான் உருவ படத்தினை தரிசிப்பதனை தவிர்க்கும் முகமாக பின்பக்க வாசல் வழியாக பணிக்கு சென்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் வேற்று மதத்தை சேர்ந்த 44 பேர் பணியில் உள்ளது தெரியவந்துள்ள நிலையில் அவர்களுக்கு தேவஸ்தானம் கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேவஸ்தானத்தில் வேலை செய்யும் வேற்று மதத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.