இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பெண்கள் இனிவரும் காலங்களில் ஆண்களின் துணையின்றி செல்ல முடியும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் கலந்துரையாடும் வகையி;ல் பிரதமர் மோடி கலந்து வரும் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சில் கலந்து கொண்டு வருகின்றார். அந்தவகையில் ஆண்டின் இறுதி நிகழ்ச்சியை நிறைவு செய்த போதே குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு நீக்கியிருப்பதாக தெரிவித்த அவர் அதன்படி 45 வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனிவரும் காலங்களில் ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்லலாம் எனத் தெரிவித்துள்ளார். 1300 முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த முஸ்லீம் பெண்களும் ஹஜ் யாத்திரைக்கு செல்கின்ற நிலையில் அவர்களுடன் ஒரு ஆண் கட்டாயமாக செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த கட்டுப்பாடு தொடர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது எனவும் இதன் மூலம் முஸ்லீம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இனி முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரைக்கு செல்லலாம் எனத் தெரிவித்த மோடி, வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எனினும், பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கும் படியும், அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும் படியும் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.