குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் உட்கட்டுமானங்களின் அபிவிருத்தி மிக முக்கியமானது. அதிலும் வீதிகளின் அபிவிருத்தி என்பது மிகமிக முக்கியமான உட்கட்டுமான அபிவிருத்தியாக காணப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான இணைப்பு வீதிகள் கடந்த காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும் கூட உள்ளக வீதிகளில் தொன்னூறு வீதமானவை மிக மோசமான நிலையில் எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படாது காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறங்கள் தொட்டு கிராமங்கள் வரை உள்ளக வீதிகளின் அபிவிருத்தி என்பது இல்லை என்றே கூறுமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்த உள்ளக வீதிகள் அந்தந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமானது.கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பிரதேச சபைகளை பொறுத்தவரை கடந்த காலம் தொட்டு இன்றுவரை அவற்றின் வினைத்திறனற்ற செயற்பாடுகள், ஆளுமையின்மை, நிதப்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களினால் உள்ளக வீதிகளை புனரமைப்பதில் தோல்வி கண்டுள்ளன. இதனால் மக்கள் நாளாந்தம் இவ்வாறான வீதிகளால் பயணிக்கும் போதும் பல்வேறு சிமரங்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர்.
மழைக்காலங்கள் என்றால் வீதிகள் வாய்க்கால்கள் போன்றும், வெயில் காலங்கள் என்றால் புழுதியாகவும் இருப்பதனால் மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை விரல் விட்டு எண்ணக்க கூடிய ஒரு சில கிராமங்களை தவிர ஏனைய எல்லா கிராமங்களின் வீதிகளின் நிலையும் இவ்வாறுதான் காணப்படுகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் உள்ள பெரியபரந்தன் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளின் நிலைமைகளும் மிக மோசமாகவே உள்ளன. கிராமம் உருவாக்கப்பட்டு ஆதாவது 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பெரியபரந்தன் கிராமத்தில் எந்தவொரு வீதியும் புகரமைப்புச் செய்யப்படவில்லை. இங்கு 500 மேற்பட்ட குடும்பங்க்ள வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் நாளாந்தம் கிராமத்தை விட்டு வெளியே சென்று வருகின்றனர். குறி்பாக இந்த கிராமத்தில் மூன்று பாடசாலைகளுக்கும் மாணவா்கள் சென்று வருகின்றனர். இவா்கள் நாளாந்தம் தங்களின் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டே பயணிக்கின்றனர். மழைக்காலங்களில் மாணவர்கள் காலணிகளை கையில் கொண்டு சென்று பிரதான வீதியை அடைந்த பின்னரே அணிந்து செல்கின்றனர் . இவ்வாறு அனைத்து தேவைகளின் பொருட்டும் மிக மோசமான வீதி காரணமாக பாதிக்கப்படும் மக்கள் பெரியபரந்தன் மக்கள் பொறுமையிழந்து அண்மையில் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பிவிட்டு காத்திருகின்றனர். எனவே இவர்களின் காத்திருப்புக்கு பயன் கிடைக்குமா? அல்லது இலவு காத்த கிளிகளா? காலம்தான் பதில் சொல்லும்