சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, காணாமல் போன 32 பேரும் எண்ணெய் கப்பலில் பணிப்புரிபவர்கள் என்று சீன போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. 32 பேரில் 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள். சரக்கு கப்பலில் இருந்த 21 பேரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் “விபத்துக்குள்ளான அந்த கப்பல் இன்னும் எரிந்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளது. மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளோம்.” என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
எட்டுக் கப்பல்களை மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளது. அந்தக் கப்பல் 60 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எண்ணெயை இரானிலிருந்து சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.