திருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. திருவள்ளுவர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது தமிழக அமைச்சர் பாண்டியராஜன் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழக தமிழ் வளர்ச்சித் துறையின் ஏற்பாட்டில், சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில், அமைச்சர் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் முதலியோர் கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி, மரியாதை செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், நாவை அடக்கி வைக்க வேண்டும் என, திருவள்ளுவர் தனது குறளில் சொன்னதை அரசியல்வாதிகள் கடைபிடித்தால், அரசியல் நாகரீகம் தழைக்கும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சர் பாண்டியராஜன் கருத்துத் தெரிவிக்கையில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி இந்திய மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறினார். திருக்குறளை தொன்மை வாய்ந்த நூலாக யுனெஸ்கோ அறிவிக்கக்கோரி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.