188
முல்லைத்தீவிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர் ..
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு – வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதி உள்ளிட்ட 617 ஏக்கர் காணியை நிரந்தரமாக அபகரிக்கும் முயற்சியில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி வட்டுவாகல் மக்கள் ஒரு மாதகால அவகாசம் வழங்கியிருந்தனர்.
கடந்த 4ஆம் திகதி கால அவகாசத்தை வழங்கியிருந்தனர். எனினும் இதுவரையில் எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் தம்மை வந்து சந்திக்கவில்லை என்றும் தமது காணிகளை அபகரிக்கும் அரசின் முயற்சிக்கு தமிழ் தலைவர்களும் உடந்தையா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலி வடக்கு சம்பூர் போன்ற இடங்களில் காணிகளை விடுவிப்பதில் தமிழ் தலைவர்கள் செலுத்திய அக்கறையை முல்லைத்தீவு மாவட்டத்திலும் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ள வட்டுவாகல் பிரதேச மக்கள் தமது விடயத்தில் தமிழ் தலைமைகள் மௌனித்திருந்தால் கடும் எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 4ஆம் திகதிக்கு இடையில் தம்மால் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் உரிய தீர்வை அரசு வழங்க வேண்டும் என்றும் அதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் முள்ளிவாய்க்கால் – வட்டுவாகல் பிரதேச மக்கள்.
வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலைகின்றனர்.
Spread the love