குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை பதவி விலக வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனாதிபதி அமைச்சரவையை பிரதிநிதித்துவம் செய்ததுடன், அமைச்சரவையை நியமித்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் அமைச்சரவையினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார்கள் எனவும் பிரபல்யம் அடைவதற்காக தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி எதனைப் பேசினாலும் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொறுப்பு உண்டு என்பதனை மறுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.