குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தங்களின் கொள்கைகளையும், கருத்துக்களையும், சொல்லி மக்களிடம் வாக்குகளை பெற முடியாதவர்கள்தான் எங்கள் சுயேட்சைக்குழு தொடர்பிலும், என் தொடர்பிலும் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று(26) கிளிநொச்சியில் தனது அலுவலகத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018 கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைத்தப் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே ஈபிடிபி கட்சியிலிருந்து வெளியேறினேன்.இனி ஒரு போதும் மீண்டும் மக்களின் உணர்வுகளுக்கு புறம்பாக ஈபிடிபியுடன் சேர்ந்துகொள்ளமாட்டேன். 2015 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் என்னை தெரிவு செய்யாமைக்கான காரணம் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்ட போதும் நான் சார்ந்திருந்த கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை எனவேதான் நான் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அக்கட்சியிலிருந்து விலகினேன் இதனை மக்கள் உறுதியாக நம்பமுடியும். நான் மீண்டும் ஈபிடிபியுடன் இணைந்துவிடுவேன் என கிளிநொச்சியில் சிலர் மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது எங்களுக்கு காணப்படுகின்ற மக்கள் ஆதரவு கண்டு அச்சமடையும் தரப்பினர்களே இவ்வாறு பொய்களை பரப்பி வருகின்றார்கள் எனத் தெரிவித்த அவர்
கிளிநொச்சியில் பல இடங்களிலும் எங்களின் சுயேட்சைக் குழு சின்னமான கேடயத்திற்கு பதிலாக வெற்றிக் கிண்ணத்தை போலி வாக்குச் சீட்டுகளில் அச்சிட்டு சட்டவிரோதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விநியோகித்து வருகின்றனர். அது மாத்திரமன்றி எங்களது பெண் வேட்பாளர்கள் தொடர்பிலும் அவதூறுகளை மிகவும் அநாகரீகமாக பரப்புக்கின்றனர் இது தொடர்பில் நாம் கிளிநொச்சி பொலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் அலுவலகம் போன்றவற்றில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளோம், எனவும் தெரிவித்த அவர்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அது காலத்தின் கட்டாயம் ஆனால் இங்கு கடந்த காலங்களில் பிரதேச சபைகளை தங்களின் அதிகாரத்தில் வைத்திருந்தவர்கள் வினைத்திறன் மிக்க எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை அதன் வெளிப்பாடுதான் எங்களது பிரதேசங்களின் இன்றைய அவலங்கள் ஆனால் எங்களது கைகளுக்கு பிரதேச சபைகளின் அதிகாரங்கள் வருகின்ற போது நாங்கள் கிளிநொச்சி மாவட்டததை ஒரு நிறைவான மாவட்டமாக மாற்றியமைப்போம், எனவும் தெரிவித்தார்.