இன்று செவ்வாய் நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது எனவும் அதனைப் பயன்படுத்த முடியாது எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நாட்டுமக்களுக்கு ஆற்றிய சிறப்பு தொலைக்காட்சி உரையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்தியா முழுதும் நவம்பர் 9 மற்றும் 10 முதல் ஏ.டி.எம்.கள் செயல்படாது எனவும் டிசம்பர் 30ம் திகதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் 500 மற்றும் 1000 ரூபா தாள்களை அடையாள அட்டை காண்பித்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபா தாள்கள்தான் கறுப்புப் பணத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுவதாகவும் கறுப்புப் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கள்ள தாள்களை அடித்து விநியோகித்து வருகின்றனர் எனவும் ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாதம் போன்றன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கின்றது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.