தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் நடவடிக்கை தொடர்பில் விசாரணை செய்ய பணிப்புரை.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவானது முறையான விசாரணை ஒன்றை நடாத்த வேண்டும் என மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சட்டத்தரணி கு.குருபரன் மன்றில் தெரிவிக்கையில் ,
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக செயற்படுகின்றார். அத்துடன், நீதிமன்றம், காவற்துறை, மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையில் தொடர்பு உள்ளது என அவர் பத்திரிகை கட்டுரைகளில் ‘பிக் டில்’ என்ற சொற்பத்த்தை பயன்படுத்தி கட்டுரை எழுதி உள்ளார்.
நாட்டில் நீதித்துறை மீதும், தேர்தல்கள் திணைக்களம் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் அது வீணடிக்கப்பட கூடாது. எனவே அது தொடர்பாக மன்று கட்டளையொன்றை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரனி மன்றில் கோரினார்.
அதனை தொடர்ந்து நீதிவான் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை மோர்க்கொள்ள வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.