குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு சிறைச்சாலையில் விசேட சலுகை வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் கொழும்பு மகசீன் சிறைச்சாலையின் ஈ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பிரபுக்களை தடுத்து வைக்கும் சிறைக் கூடமொன்றில் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்களை ஆதாரம்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 1970ம் ஆண்டில் இந்த சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச மற்றும் பல முக்கிய பிரபுக்கள் இந்த சிறைகூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய கைதிகள் இந்த சிறைக்கூடத்திற்குள் பிரவேசிக்க முடியாது எனவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது