நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி காணாமலாக்கபட்டோர் என எவரும் இல்லை எனவும் எனவே காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே வவுனியாவில் 348 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வோம் என தெரிவித்த ஜனாதிபதி, தற்போது காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகள் இல்லை என தெரிவித்திருக்கிறார் எனத் தெரிவித்ததுள்ள அவர்கள் ஜனாதிபதியுடன் தமது பிள்ளைகள் நிற்கும் ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமது பிள்ளைகளுக்கு ஜனாதிபதியால் நட்டஈடு கொடுக்க முடியுமா எனத் தெரிவித்த அவர்கள் தாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தமது பிள்ளைகள் இல்லை என ஏன் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரசாங்கத்தில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும் தமது பிரச்சினையில் சர்வதேசம் தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்..